search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலர் தினம்"

    • ஸ்டோய்னிஸ் கன்னத்தில் ஜாம்பா முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    • ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர்.

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அன்புக்குரியவர்களைக் கெளரவிப்பதற்கும் அவர்களை சிறப்புற உணர வைப்பதற்கும் ஒரு நாள். பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஒருவருக்கு ஒருவர் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாம்பா ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் ட்விட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான ஈமோஜியுடன் தலைப்பிட்டுள்ளது. 

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.

    காதலர் தின ஆஃபர் விவரங்கள்:

    ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.

    இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.

    • காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
    • 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

    காரைக்குடி:

    உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருடந்தோறும் நூதன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

    அப்போது காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.

    காதலர் தினமென்ற பேரில் பொது இடங்களில் சில காதலர்கள் தகாத செயல்களை செய்கின்றனர். இதனை கண்டித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

    • கேரளா, மும்பை, டெல்லி, ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும் நேற்றுவரை ஓசூரில் இருந்து 1 கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் விற்பனை ஆயின.
    • உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    ஓசூர்:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தை இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர். காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா தான்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்காக ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூருவை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.

    ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன. ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உருவெடுத்துள்ளது.

    தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், கார்வெட் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் ஓசூரில் பயிரிடப்படுகின்றன. எனினும் தாஜ்மஹால் என்று சொல்லக்கூடிய 15 முதல் 30 சென்டி மீட்டர் நீலமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு சந்தையில் தனிமதிப்பு உள்ளதால் விவசாயிகள் சிவப்பு ரோஜாக்களையே அதிகம் சாகுபடி செய்வார்கள்.

    ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்களின்போது ஓசூர் ரோஜா மலர்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பும், சந்தை வாய்ப்பும் இருந்து வருகிறது.

    இன்று காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து பல நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் ஆஸ்திரேலியா, குவைத், துபாய், பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி ஆயின.

    இதில் தாஜ்மஹால், அவலாஞ்சி ஆகிய பூக்கள் சிங்கபூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரசு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகளவில் ரோஜா மலர்களை விவசாயிகள் அனுப்பினர். மும்பை வழியாக மட்டும் இந்த ஆண்டு 158 டன் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின.

    கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் காதலர் தினத்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். பின்பு கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் காதலர் தினத்தை குறிவைத்து விவாசயிகள் ரோஜா மலர்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் மேற்கொண்டனர்.

    தற்போது இலக்கைவிட அதிகமாக ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் அதிக அளவில் மழை மற்றும் பனிப்பொழிவால் ரோஜா மலர் செடிகளுக்கு டவுனி நோய் தாக்கியதால், ஒரு ரோஜா செடியில் இருந்து சுமார் 30 ரோஜாக்கள் பூக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 ரோஜாக்கள் மட்டுமே பூத்தது.

    ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிக அளவு மலர் உற்பத்தி ஆகியது. கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதலே காதலர் தினத்திற்கான ரோஜா மலர் ஏற்றுமதி தொடங்கியது.

    தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முகூர்த்தங்களும், சுப நிகழ்ச்சிகளும் அதிகமாக உள்ளதால் உள்ளூர் சந்தைகளிலும் மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதாக கொய்மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கேரளா, மும்பை, டெல்லி, ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும் நேற்றுவரை ஓசூரில் இருந்து 1 கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் விற்பனை ஆயின. கொரோனாவுக்கு முன்பு 20 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது கடந்த 10-ந்தேதி அன்று ஒரு கட்டு 400 வரை விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கட்டு 200-க்கு விற்பனையானது. ஓசூரில் இந்த ஆண்டு தாஜ்மகால் பூக்கள் அதிகம் விற்பனையானது.

    இதுகுறித்து ரோஜா மலர் விவசாயிகள் கூறுகையில், ''காதலர் தினத்தையொட்டி ஓசூரில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே 5 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.

    உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஒரு பூ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ரோஜா விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. வியாபாரத்தையும், ஏற்றுமதியையும் அதிகரிக்க ஓசூரில் கட்டப்படுள்ள கொய்மலர்களுக்கான சர்வதேச ஏல மையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்'' என்றனர்.

    • காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
    • கோவை மாவட்டத்தில் வ.உ.சி. பூங்கா மற்றும் வாலாங்குளம் கரையில் காலை முதலே காதல் ஜோடிகள் குவிந்தனர்.

    கோவை:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் இருப்பதால் காதல் ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நீலகிரிக்கு வருவது வழக்கம்.

    இந்த ஆண்டும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

    இன்று காலை காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    இருவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவுக்கு சென்றனர். அங்கு ரோஜா பூக்களை கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் காதலின் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.

    தொடர்ந்து பூங்காவில் அடுக்கி வைத்திருந்த மலர் செடிகளை பார்வையிட்டு, அதன்முன்பு ஜோடியாக நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி காதல் பரிசாக ரோஜாப்பூ, பரிசு பொருட்களையும் வழங்கினர்.

    தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா போன்ற சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

    கோவை மாவட்டத்தில் வ.உ.சி. பூங்கா மற்றும் வாலாங்குளம் கரையில் காலை முதலே காதல் ஜோடிகள் குவிந்தனர்.

    அவர்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை கூறி கொண்டு பல்வேறு பரிசுபொருட்களையும் பகிர்ந்து கொண்டனர். சில காதல் ஜோடிகள் குளக்கரையில் அமர்ந்து காதல் பரிசாக அன்பு முத்தங்களை பகிர்ந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.

    இதேபோல் உக்கடம் பெரிய குளம், ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம் பகுதிகளிலும் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் அமர்ந்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.

    காதலர் தினத்தையொட்டி மலர் விற்பனை நிலையங்கள், கிப்ட் ஷாப்புகளிலும் பரிசு பொருட்கள் வாங்க ஏராளமான காதல் ஜோடிகள் திரண்டு இருந்ததை காண முடிந்தது.

    காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இருக்கவும், அதே சமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி மற்றும் கோவையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    • காதல் ஜோடியினர் கரம் கோர்த்தபடியும் தோளில் கைபோட்ட படியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்
    • கடை வீதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுது போக்கு பூங்கா.

    சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே குவிய தொடங்கினர்.

    காதல் ஜோடியினர் கரம் கோர்த்தபடியும் தோளில் கைபோட்ட படியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். ஒரு சிலர் மறைவான இடங்களில் அமர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர். கடற்கரையில் நின்றவாறு சில ஜோடிகள், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    கடை வீதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கி சென்றனர். இதே போல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களாக வழங்கி மகிழ்ந்தனர்.

    கடற்கரையில் உள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டு உள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்தனர்.

    அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் இன்று ஏராளமான காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.

    கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்தனர். ரோஜா மலர்களை பரிமாறி சிலர் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    காதலர் தினத்தை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • அமேசான் வலைதளத்தில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டேப்லெட், என ஏராளமான பிரிவுகளில் மின்சாதனங்கலுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    காதலர் தினத்தை ஒட்டி அமேசான் வலைதளத்தில் Fab Phones Fest Sale அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் ரூ. 77 ஆயிரத்து 899 முதல் கிடைக்கிறது. இதில் அனைத்து சலுகை மற்றும் வங்கி தள்ளுபடிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அமேஸ்ஃபிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகளை சேர்த்து ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் ரக்கட் மாடல் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

     

    ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் வயர்டு இயர்போன்கள் பிரிவில் போட் ஏர்டோப்ஸ் 141 மாடல் ரூ. 1,099 விலையிலும், ஜெபிஎல் வேவ் 200 மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையிலும், நாய்ஸ் பட்ஸ் VS201 V2 மாடல் ரூ. 999 விலையிலும் சென்ஹெய்சர் IE 100 ப்ரோ இன்-இயர் வயர்டு இயர்போன் ரூ. 6 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. சியோமி பேட் 5 மாடல் ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் ரியல்மி பேட் வைபை 4ஜி டேப்லெட் மாடல் ரூ. 17 ஆயிரத்து 189 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    வங்கி சலுகைகள்:

    ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது எஸ்பிஐ மேக்ஸ் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளில் பத்து சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீத தள்ளுபடி அல்லது அதிகபட்சம் ரூ. 1250 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    வங்கி தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகளில் சேர்க்கப்படுகிறது. விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    Source: fonearena

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    நாகர்கோவில்:

    உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    காதலர் தினத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில்,காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வரு கின்றனர். தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசு வழங்க பொருட்களை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளதால், காதலர் தினத்தை கொண்டாட அங்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை பீச், குளச்சல் பீச், வட்டவிளை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நாைள கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் காதலர் தின நாளில் சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • நாளை காதலர் தினம் என்பதால் மதுரை மலர் சந்தையில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்தன.
    • ஒரு பாக்கெட் ரூ.200-க்கு விற்பனையாகிறது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூ கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவது வழக்கம்.

    நாளை காதலர் தினம் என்பதால் ரோஜா மலர்கள் அதிகளவில் விற்பனையாகும். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தைக்கு ரோஜா மலர்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ரோஜா மலர்கள் ஓசூர், கொடைக்கானல், ஊட்டி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் ரோஜா பூக்கள் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரையில் காதலர்கள் எல்லை மீறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி ராஜாஜி பூங்கா, எக்கோ பார்க், அழகர்கோவில் மலை, திருமலை நாயக்கர் மகால் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று முதலே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை ராஜாஜி பூங்காவுக்கு காதலர் தினத்தையொட்டி ஜோடியாக வந்திருந்த சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பலருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மதுரைக்காரர்களுக்கு ஏற்கனவே காதலர் வாரம் தொடங்கி விட்டது. காதலர் தினம் என்றால் பலருக்கும் ரோஜா பூக்கள் தான் நினைவுக்கு வரும். அது தவறு. ப்ரவரி 7-ந்தேதி ரோஜா தினம் ஆகும். அன்றுதான் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.

    பிப்ரவரி 8-ந்தேதி முன்மொழிவு நாள். அன்றுதான் நேசிப்பவர்க ளிடம் காதலை வெளிப் படுத்த வேண்டும். பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் தினம். அன்றைய நாளில் காதலர்கள் விரும்பத்தகாத மற்றும் மோசமான நிகழ்வு களை மறந்து, சாக்லேட் பகிர்ந்து காதலை பரிமாறிக் கொள்வார்கள்.

    பிப்ரவரி 10-ந்தேதி டெடி டே அன்று அழகான பொம்மையை வழங்கியுள்ளோம். அது எங்களின் மன அழுத்தத்தை குறைக்க, முகத்தில் புன்ன கையை வரவழைக்க உதவியாக இருக்கும். பிப்ரவரி 11-ந்தேதி வாக்குறுதி தினம். அன்றைய நாளில் காதலர்கள் உறவை ஆழப்படுத்திக் கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் உறுதியேற்றுக் கொண் டோம்.

    பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள். அன்றைய நாளில் அன்புக்குரியவர்களை அரவணைப்பதன் மூலம் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளோம். அது நிச்சயமற்ற தன்மை அல்லது எதிர்காலம் பற்றிய கவலையை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும்.

    • விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் காதலர் தினத்தை கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்தனர்.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலர் தினத்தை கொண்டாட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    பிப்ரவரி 14-ந் தேதி ஆண்டுதோறும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, காதலர்கள் பரிசுகளை வழங்கி, நினைவுகளை பரிமாறி கொள்வார்கள். காதலர் தினம் நெருங்குவதால் இப்போதே காதலர்கள் நினைவு பரிசை தேர்வு செய்து வருகிறார்கள்.

    இதேபோல விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் காதலர் தினத்தை கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஆடுகளை திருடி உள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பிரங்கிமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 20). செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எனவே 2 பேரும் காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் கையில் போதுமான பணம் இல்லை.

    எனவே ஆடுகளை திருடி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக விழுப்புரம் அருகே மலையரசன் குப்பம் பகுதிக்கு சென்றனர். அங்கு முருகன் மனைவி ரேணுகா என்பவர் தனது வீட்டு வாசலில் 10 ஆடுகளை பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்தார்.

    இவற்றில் 1 ஆட்டை மட்டும் 2 பேரும் திருடி மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றனர். அப்போது ஆடு கத்தியது. சத்தம் கேட்டு ரேணுகா ஓடிவந்தார். அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என உரக்க கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடிவந்தனர். ஆடு திருடிய வாலிபர்களை மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலர் தினத்தை கொண்டாட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனினும் உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டம் மாறுபடுகிறது. சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு தேதியில் கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள். காதலர் தின பரிசு பொருட்களும் வித்தியாசப்படுகிறது. அத்தகைய காதலர் தின கொண்டாட்டம் பற்றி பார்ப்போம்.

    சீனா

    சீனாவில் கொண்டாடப்படும் `கியூஸி' திருவிழா காதலர் தினத்திற்கு இணையாக கருதப்படுகிறது. அதனையே அந்நாட்டு மக்கள் காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். இது அந்நாட்டு காலண்டரில் சந்திர மாதத்தின் ஏழாவது நாளில் வருகிறது. அதாவது ஆகஸ்டு மாதம் சீனாவின் காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் இளம் பெண்கள் ஜினு என்னும் தெய்வத்திற்கு பழங்களை பிரசாதமாக படைத்து, தனக்கு நல்ல துணைவனை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகிறார்கள். திருமணமான தம்பதியர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள்.

    இங்கிலாந்து

    பிப்ரவரி 13-ந் தேதி இரவு இளம் பெண்கள் தலையணையின் நான்கு மூலைகள் மற்றும் மத்திய பகுதி என ஐந்து பிரியாணி இலைகளை வைத்தபடி தூங்குவார்கள். தங்கள் வருங்கால கணவனைப் பற்றிய கனவுகள் வருவதற்காக இந்த முறையை பின்பற்றுகிறார்கள். திருமணமான தம்பதியர் பிப்ரவரி 14-ந் தேதி ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறி காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள். இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டபடி தங்கள் காதல் உணர்வுகளை பரிமாறிக்கொள்வார்கள்.

    பிரேசில்

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாரம்பரிய திருவிழா நடத்தப்படுவதால் அங்கு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை. அதற்கு மாற்றாக ஜூன் 12-ந் தேதி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அப்போது சாக்லெட்டுகள், வாழ்த்து அட்டைகள், பூக்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்கிறார்கள்.

    கானா

    கோகோ ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதால் காதலர் தினத்தை சாக்லெட்டுடன் தொடர்புபடுத்திவிட்டார்கள். 2005-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14-ந் தேதி அங்கு சாக்லெட் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு சாக்லெட் மற்றும் கோகோ பொருட்களை பரிமாறி மகிழ்கிறார்கள்.

    இத்தாலி

    இத்தாலியர்கள் காதலர் தினத்தை பரிசு பரிமாற்றங்களுடன் கொண்டாடுகிறார்கள். அங்கு பிரபலமான காதலர் தின பரிசுகளில் ஒன்று பாசி பெருகினா. இதுவும் ஒருவகை சாக்லெட்தான். அதில் சில நட்ஸ் வகைகள், பால் பொருட்கள் கலந்திருக்கும். அதனுடன் காதல் வாசகங்கள் அச்சிட்டப்பட்ட வாழ்த்து அட்டையை பரிசாக வழங்குகிறார்கள்.

    அர்ஜெண்டினா

    இங்கு வசிப்பவர்கள் பிப்ரவரியில் காதலர் தினத்தை பாரம்பரியமாக கொண்டாடு வதில்லை. அதற்கு பதிலாக, ஜூலை மாதம் கடைப்பிடிக்கப்படும் `சுவீட் வீக்' எனப்படும் இனிப்பு வாரத்தில் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பரிசுப் பொருட்கள் மற்றும் சாக்லேட்டுகளை காதலர்கள் பரிமாறிக்கொள்கிறார்கள்.

    தைவான்

    தைவானில், பிப்ரவரி 14-ந் தேதி மட்டுமின்றி ஜூலை 7-ந் தேதியும் ஆண்கள் பெரிய பூங்கொத்துகளை காதல் பரிசாக வழங்குவார்கள். இளம் பெண் ஒருவர் 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை பரிசாக பெற்றால் அந்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் என்று அர்த்தம்.

    பின்லாந்து

    பின்லாந்தின் காதலர் தினம் ஆண்-பெண் இருபாலருக்கானது அல்ல. தங்கள் நண்பர்களுடன்தான் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாட்டு மொழியில் இந்த நாள் நண்பர்களின் தினம் என்று அழைக்கப்படுகிறது.

    ஜப்பான்

    ஜப்பானிய இளம் பெண்கள் பிப்ரவரி 14 அன்று தங்களுக்கு பிடித்தமான ஆண் தோழர்களுக்கு பரிசுகள் மற்றும் சாக்லெட்டுகளை வழங்குகிறார்கள். அதன் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தோழமையுடன் பழகும் ஆண் நண்பர்களிடத்தில் தங்களுக்கு காதல் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலான சாக்லெட்டுகளும் பரிமாறப்படுகின்றன. அன்றைய தினம் ஆண்கள் பரிசு பொருட்கள் எதுவும் வழங்குவதில்லை. ஒரு மாதம் கழித்து மார்ச் 14-ந் தேதியை ஜப்பானிய ஆண்கள் காதலர் தினமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    தென் ஆப்பிரிக்கா

    உலகின் பல பகுதிகளைப் போலவே, தென் ஆப்பிரிக்காவில் அன்பின் அடையாளமாக மலர்களை பரிசளித்து காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பெண்கள் தங்கள் காதலர்களின் பெயர்களை தாங்கள் அணியும் ஆடையில் பதிக்கும் வழக்கமும் இருக்கிறது.

    பிலிப்பைன்ஸ்

    இங்கு பிப்ரவரி 14-ந்தேதி காதலர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாளாக அமைந்துவிடுகிறது. காதலர் கள் அனைவரும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒன்றாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    அமெரிக்கா காதலர்கள், திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு பரிசுகள் வழங்கி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், சாக்லெட்டுகள், மலர்கள் என இவர்களின் காதல் கொண்டாட்டம் முடிந்துவிடுவதில்லை. நகைகளை பரிசளிக்கும் வழக்கமும் இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் காதலர் தினத்தன்று சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அங்கு பணம் புழங்குகிறது.

    ஜெர்மனி

    ஜெர்மனியில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றன. எனவே காதலர் தினத்தில் பன்றி சிலைகளை பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு பன்றி உருவம் பொறித்த பொம்மைகள், சிற்பங்களை வழங்குவதுடன் சாக்லெட்டுகள் மற்றும் மலர்களையும் பரிமாறுகிறார்கள்.

    • காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.
    • காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது.

    சென்னை:

    வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூ விற்பனை களை கட்டத்தொடங்கி உள்ளது.

    காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.

    காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசாக கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக 25 ரோஜா பூக்களை காம்புடன் கட்டி அதை அழகுபடுத்தி பூங்கொத்தாக விற்பனை செய்ய குவித்து வைத்துள்ளனர். இந்த ஒரு கட்டு ரோஜாவின் விலை இன்று ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது நாளை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து கோயம்பேடு பூவியாபாரிகள் சங்க தலைவர் மூக்கையா கூறியதாவது:-

    ரோஜா பூ விற்பனை இன்று வரை சூடுபிடிக்க ஆரம்பிக்கவில்லை. நாளை முதல் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் 2 நாட்களுக்கு ரோஜா பூக்கள் அதிகமாக ஓசூரில் இருந்து வந்திறங்கிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது. டீசர்ட்டுகளில் காதலர் சின்னம் வரைந்தும், செயின், கம்மல், பர்ஸ், பேனா ஆகியவைகளில் காதலர் சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனையாகிறது அதை ஆர்வமுடன் இளசுகள் வாங்கிச் செல்கின்றனர்.

    ×